சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11 ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 13 பேர் கொண்ட குழுவினர் ஒரு செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். இந்த சிறிய ரக செயற்கைக்கோளுக்கு 'விகோ சாட்-1' எனப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த செயற்கைக்கோளை பலூன் மூலமாக விண்ணில் ஏவும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (13-02-26) அன்று நடைபெற்றது.
இந்த செயற்கைக்கோளை வி.விஷ்ணு எனும் மாணவரின் தலைமையில் ஜி.பிபின்குமாா், யு.மனோஜ்குமாா், வி.ஹரிஷ்வா், எஸ்.மிதுன், வி.முத்துக்கருப்பன், ஏ.ரஸீத் அகமது, என்.ஆசிக் ரகுமான், எஸ்.முத்துக்குமார், எஸ்.சோமேஸ்வா், பி.அபிமன்யு, எஸ்.ஹரிகரன், ஆா்.பாவேந்தன் உள்ளிட்ட மாணவர்கள் கடந்த ஆறு மாத காலத்தில் வடிவமைத்துள்ளனர்.
இதுகுறித்து, மாணவர் விஷ்ணு கூறுகையில், "எங்கள் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி, நாங்கள் (13 பேர் கொண்ட மாணவர் குழு) இந்த செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளோம். இந்த செயற்கைகோள் காற்றில் உள்ள பூஞ்சைகளைக் கண்டறியும். இதனால், விவசாயிகள் காற்றின் தன்மையை அறிந்து, தங்களது பயிர்களைக் காத்துக் கொள்ள முடியும். பலூன் மூலமாக ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 22 கிலோ மீட்டர் வரை சென்றது" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆா்.பெரியகருப்பன் உட்பட கல்வித்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களின் இந்த முயற்சியைப் பாராட்டி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில், மாணவர்களின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/14/b7-2026-02-14-15-14-19.jpg)