நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செங்கோட்டையின் கொத்தளத்திற்கு வருகை தந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாகத் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதே சமயம் சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் சுதந்திர தின உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பீச் பாய்ஸ் நண்பர்கள் சார்பாகச் சென்னை பெசனட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் (Elliot beach) இன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்விற்கு மருத்துவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சென்னை ஐ கேர் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மனோகர் பாபு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் அடையார் ஆனந்த பவன் உணவகத்தின் மேலாண் இயக்குநர் வெங்கடேஷ் ராஜா உள்ளிட்ட நடைபயிறசியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.