‘ஹர ஹர மகாதேவ்...’ - பிரதமர் மோடியை பாராட்டிய தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள்!

prai

National Democratic Alliance MPs praise Prime Minister Modi in Parliament for operation sindoor success

தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் பஹல்காம் தாக்குதல் குறித்தும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதில் கடந்த ஜூலை 28ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இரு அவைகளிலுமே விவாதம் நடத்தப்பட்டது.

அதே வேளையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்தப்பட்ட வேண்டும் என 10 நாட்களுக்கு மேலாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருவதால் ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற அவைக்குள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாடாளுமன்றத்தில் எந்தவித மசோதாக்களும் நிறைவேற்றப்படாமல் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (05-08-25) காலை தொடங்கியது. அதே வேளையில் நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று (05-08-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய பா.ஜ.க மற்றும் கூட்டணி எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் பிரதமர் மோடியைப் பாராட்டினர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதற்காகவும் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டினர். அப்போது, ‘ஹர ஹர மகாதேவ்’ என கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் ஆகிய நடவடிக்கையின் வெற்றியைப் பாராட்டி ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

monsoon session Narendra Modi PARLIAMENT SESSION Operation Sindoor
இதையும் படியுங்கள்
Subscribe