நடராஜர் கோயில் தீட்சிதர்கள், சிதம்பரம் செய்தியாளரை ஆபாசமாகவும் ஒருமையிலும் பேசியதை கண்டித்து சிதம்பரம் காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் சிவகாமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேரோட்டம் இன்று (13-11-25) காலை சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. தேரோட்டத்தில் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Advertisment

இதனை சிதம்பரம் தினகரன் புகைப்பட செய்தியாளர் பழனி என்பவர், தேருக்கு தூரத்திலிருந்து பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்ததை புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது நடராஜர் கோயில் தீட்சிதர்கள், செய்தியாளர் என தெரிந்தும் அவரை புகைப்படம் எடுக்கக் கூடாது என ஆபாசமாகவும் ஒருமையிலும் பேசியுள்ளனர். இதுகுறித்து அவர், சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகளின் தலைமையில் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நகரின் முக்கிய வீதிகளில் சாமி சிலைகள் ஊர்வலம் செல்லும் போது சில பொதுமக்கள், தங்களின் செல்போன்களை தூரத்தில் இருந்து படம் எடுத்தால் மரியாதை குறைவாக செல்போனை மூடு, அவனை பிடிடா என கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகம் செய்து வருவது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் தொடர்ந்து இவர்கள், ரகசியமாக படம் பிடித்து கட்டளைதாரர்களுக்கு வழங்குகிறார்கள். அது மட்டுமல்லாமல் நகரின் நான்கு வீதிகளிலும் பெரும்பான்மையான கடைகள் மற்றும் தெருக்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளது. அதில் அனைத்தும் பதிவாகிறது. ஆனால் இவர்கள் கும்பலாக செல்லும்போது பொதுமக்கள் மத்தியில் கெத்தை காட்டுவது போல் இதுபோன்று பொதுமக்களையும், செய்தியாளர்களையும் அவமானப்படுத்தும் நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Advertisment

திட்சிதர்களின் அடாவடி நடவடிக்கைக்கு கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் உள்ள  பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள், செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.