Nanjil Sampath after joining the Tvk and he said DMK pressured me
தமிழக அரசியலின் மூத்த தலைவரும், பிரபல திராவிட இயக்க மேடை பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், இன்று (05-12-25) விஜய்யை சந்தித்து தவெக கட்சியில் இணைந்தார்.
சமீப காலமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த நாஞ்சில் சம்பத், இன்று விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்து கொண்டார். சென்னையின் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை சந்தித்த நாஞ்சில் சம்பத், அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தவெகவில் இணைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நாஞ்சில் சம்பத், “தம்பி விஜய்யை சந்தித்து பொன்னாடையை அணிவித்து, நீயும் முதல்வராக ஆகலாம் என்ற புத்தகத்தை கொடுத்து தவெகவில் இணைத்துக் கொண்டேன். 6 ஆண்டு காலம் எந்த அரசியல் கட்சியிலும் இணையாமல் திராவிட இயக்கத்தின் சொற்பொழிவாளர் என்று சொல்லி, பெரியார் அண்ணா லட்சியங்களை பேசி வந்த நான், இன்று தவெகவில் இணைந்து நாடு முழுக்க பிரச்சாரம் மேற்கொள்ள தம்பி விஜய் அனுமதித்திருக்கிறார். என்னை பார்த்த நிமிடத்தில், நான் உங்கள் ஃபேன் என்றார். அவர் சொன்னவுடன் நான் மெய்சிலிர்த்து போனேன். இப்படி ஒரு அங்கீகாரத்தை தருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கரூர் துயர சம்பவத்தில் டெல்லி சுப்ரீம் கோர்ட், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அப்போது நான், இது தவெகவிற்கு கிடைத்த வெற்றி. கையறு நிலையில் கைவிடப்பட்டு இருந்த கண்ணீரோடு இருந்த தவெக அடுத்த அடியை எப்படி எடுத்து வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த போது உச்ச நீதிமன்றம் புதிய வாசலை திறந்திருக்கிறது என்றேன்.
அந்த நிமிடத்தில் இருந்து அறிவாலயத்தில் இருந்து காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு வசைச்சொற்களால் என்னை வசைபாடினார்கள். 5 நாட்கள் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு ஒப்புக் கொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள். அறிவுத்திருவிழாவில் என்ற பெயரில், காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற நூல் வெளியீட்டு விழாவில் 44 சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்ட அமர்வு வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. ஒரு சொற்பொழிவாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டுமென்றாலும் முதல் இடத்தில் இருக்கும் தகுதி எனக்கு இருக்கிறது. ஆனால், என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள். அதற்கு பிறகு, தம்பி உதயநிதிக்கு பிறந்தநாளை முன்னிட்டு ஒரு திங்களுக்கு முன்னாடி வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் சேகர்பாபு என்னிடம் தேதி பெற்றிருந்தார். அந்த நிகழ்வில் கடந்த 28ஆம் தேதி கொரட்டூரில் நான் பேசினேன். அந்த நிகழ்விலேயே இயக்குநர் கரு.பழனியப்பன் என்னை நக்கல் செய்தார், நையாண்டி செய்தார். அதற்கு ஒரு வாரம் முன்பு நடந்த நிகழ்வில் சு.ப.வீரபாண்டியன் திமுக மேடையிலேயே என்னை குறைத்துப் பேசினார். நான் மனதளவில் உடைந்து போனேன்.
நான் அவர்களிடம் ஒன்றும் கேட்கவில்லை. கேட்டாலும் ஒரு சைக்கிள் கூட தரமாட்டார்கள். எந்த பரிந்துரைக்கும் நான் அவர்களிடம் நிற்கவில்லை. ஏதோ 4 கூட்டங்களை நடத்தி என்னுடைய வாழ்க்கையை நடத்தலாம் என்று பார்த்தால் என்னுடைய வயிற்றில் அடிப்பது மாதிரி என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்து எனக்கு மிகுந்த வலியை தந்தார்கள். ஒரு தனியார் சேனலில், விஜய் சரியாக பாதையில் பயணிக்கிறார் என்று கூறினேன். அந்த நாளில் இருந்து எனக்கு நெருக்கடியும், வசையும், மிரட்டலும் அதிகமாக வந்து கொண்டிருந்தது. இதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. எனக்கு யார் மீதும் கோபமில்லை, வருத்தமும் இல்லை. என்னுடைய திசையை தவெக தலைவர் விஜய் தீர்மானித்திருக்கிறார். நான் உற்சாகமான மனநிலையில் இருக்கிறேன். கடந்த காலங்களில் பெற்ற காயங்களில் இருந்து விடுபட்டவனான உணர்கிறேன்.
என்னை முடக்கி வைத்திருந்தனர். இயங்குவதற்கான வாய்ப்பை விஜய் தந்துள்ளார். தமிழ்நாட்டில் இனி பேசுவதற்கு நிறைய உள்ளன, இனிமேல் பரபரப்பாகவே இருக்கும். திராவிட இயக்கத்தின் நீழ்ச்சியாக தான் விஜய் இருக்கிறார். லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்திருக்கும் இயக்கம் தவெக. ஒரு நாட்டின் காலை பொழுதை தீர்மானிப்பதே இளைஞர்கள் தான். அந்த இளைஞர்களை வைத்துக் கொண்டு ஒரு அதிரடி மாற்றங்களை செய்வதற்கு தம்பியிடம் திட்டம் இருக்கிறது என்று நம்புகிறேன். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அவர் பேசாமல் இருப்பது நல்லது. பா.ஜ.கவுடன் இணக்கமாக போக்கு வைத்திருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் அப்படி ஒன்றுமில்லை. தேர்தல் இங்கு நடக்கப் போகிறது, அதனால் அதிகாரத்தில் இருப்பவர்களை கூர்மையாக விமர்சிக்கிறேன் என்றார்” என்று தெரிவித்தார்.
Follow Us