சித்தரிக்கப்பட்ட மாதிரிப் படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பல ஏரிகள் பயனடையக்கூடிய வகையில் தண்ணீரை எடுத்துக் கொள்வதற்காக திட்டம் தான் நந்தன் கால்வாய் திட்டம். இந்நிலையில் நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்காக முதற்கட்டமாக 42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “திருவண்ணாமலை மாவட்டம், தென்பெண்ணையாற்றை செய்யாற்றின்வழியாக பாலாற்றுடன் இணைத்து நந்தன் கால்வாய்க்கு பாசன வசதி அளித்தும், புதிய கால்வாய் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 22 ஏரிகள் பயனடையவும் மற்றும் ஏற்கனவே உள்ள நந்தன் கால்வாய் மேம்படுத்துவதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளுக்கும் ஆக மொத்தம் 58 ஏரிகளுக்கும் நீர் வழங்கும் திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கு நிர்வாக அனுமதி மற்றும் அதற்கான செலவினத் தொகை ரூ. 42 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 310 ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக விக்கரவாண்டி எம்எல்ஏ அந்நியூர் சிவா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “என் வாழ்நாளில் இந்நாள் ஒரு வரலாற்றுப் பொன்னாளாக திகழ்கிறது. 1952ஆம் ஆண்டு முதல், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் "நந்தன் கால்வாய், நந்தன் கால்வாய்" என முழங்கிய குரலுக்குச் சொந்தக்காரரும், அப்போதைய விக்கிரவாண்டி தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றியவரும், திமுகவின் காவலர் எனப் பேரறிஞர் அண்ணாவாலும், கட்சியின் கொள்கைக் குன்று என கலைஞர் அவர்களாலும் பெருமையுடன் போற்றப்பட்டவருமான, மக்களால் அன்புடன் "ஏ.ஜி" என அழைக்கப்பட்ட ஐயா திரு. ஏ. கோவிந்தசாமி அவர்களின் கனவுத் திட்டமான "நந்தன் கால்வாய்" திட்டத்திற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்ட தருணத்தை நான் காணும் பெருமை பெற்றுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us