நாமக்கல்லில் பட்டப்பகலில் நிதி நிறுவன உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வசித்து வந்தவர் அருள்தாஸ் (45) நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த 5 ஆம் தேதி வழக்கம்போல காலை உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற அருள்தாஸ், 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சரக்கு ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மேல் ஈச்சனாரி பகுதியில் இருசக்கர வாகனத்தை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக அருள்தாஸை வெட்டி உள்ளனர்.

இதில் கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அருள்தாஸ் ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் இதைக்கண்டு கூச்சலிட்ட நிலையில் அந்த நபர்கள் ஆட்டோ மற்றும் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை விட்டுவிட்டு தப்பி சென்றனர். உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மோகனூர் போலீசார் படுகாயம் அடைந்த அருள்தாஸை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சரக்கு ஆட்டோ மற்றும் அரிவாள்களை வைத்து கொலையை நிகழ்த்திய நபர்கள் யார் என்பது குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வந்தனர்.

Advertisment

விசாரணையில் நண்பரே அருள்தாஸை கொலை செய்தது தெரியவந்துள்ளது. ராசிபுரம் பகுதியில் கார்த்திக் என்பவர் தாபா நடத்தி வந்த நிலையில் அவருடன் சேர்ந்து அருள்தாஸ் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். வரவு செலவு கணக்குகளில் அருள்தாஸ் குளறுபடி செய்ததாக கார்த்திக்கிற்கு சந்தேகம் எழுந்து, அது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.  இறுதியில் அருள்தாஸ் 42 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்தது கார்த்திக்கிற்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

கொடுக்க வேண்டிய பணம் குறித்து அருள்தாஸிடம் கார்த்திக் கேட்டபோது வீட்டை விற்று பணம் தருவதாக சொல்லி அருள்தாஸ் காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அருள்தாஸ் ஏற்கனவே தன்னுடைய வீட்டை விற்றது தெரிய வந்தது. இந்நிலையில் ஒருகட்டத்தில் பணத்தை தர முடியாது என அருள்தாஸ்  கார்த்திக்கிடம் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரத்தில் இருந்த கார்த்திக் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து அருள்தாஸை கொலை செய்தது தெரியவந்துள்ளது.