விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள அர்ஜுனாபுரத்தில் உள்ள நல்லதங்காள் கோவில் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அந்த பகுதி மக்கள் தீக்குளித்து விடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஊர் மக்கள் தெரிவிக்கையில் 'நாங்கள் பாலாலயம் செய்து இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்து சிலையை வைத்துள்ளோம். இந்து அறநிலையத்துறை இந்த கோவிலுக்குள் வரக்கூடாது. நாங்களே இந்த கோவிலை பார்த்துக் கொள்கிறோம்.  இந்த சம்பவத்தில் சிலையை உடைத்த ஐந்து பேரை வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது  செய்துள்ளீர்கள். போலீசார் விசாரணையை பார்த்துக் கொள்ளட்டும் நாங்கள் கோவிலை பார்த்துக்கொள்கிறோம். விசாரணைக்குள் இந்து சமய அறநிலையத்துறை வர வேண்டாம்' என அந்த பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் அங்கு குவிந்துள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற பொழுது அங்கிருந்த மக்கள் சிலர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.