சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (வயது 101) வயது மூப்பு காரணமாகப் பல மாதங்களாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இத்தகைய சூழலில் தான் மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 1ஆம் தேதி நல்லகண்ணு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்படி கடந்த 25 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலையில் கடந்த 23ஆம் தேதி (23.02.2026) இரவு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் நல்லகண்ணு அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்தது. இதனால், நேற்று (25.02.2026) மதியம் 01.55 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மறைந்த நல்லகன்னு உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது வைகோ புரட்சியாளர் நல்ல கண்ணுக்கு வீர வணக்கம் வீர வணக்கம். வீர வணக்கம் வீர வணக்கம் வாழ்நாள் போராளி நல்ல கண்ணுக்கு வீர வணக்கம் வீர வணக்கம்” எனத் தொடர்ந்து முழக்கம் இட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “அரசியலுக்கு இன்றைக்கு யார் வந்தாலும் சரி, இனி யார் வந்தாலும் சரி, அவர்கள் எடுத்துக்காட்டாக வழிகாட்டும் ஞான தந்தையாக மனதிலே கருதிப் பின்பற்ற வேண்டிய தலைவன்தான் தான் அண்ணன் நல்லக்கண்ணு.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/26/nallakannu-bw-2026-02-26-11-16-02.jpg)
எளிமையின் சிகரம். நேர்மையின் சிகரம். பாட்டாளி வர்க்கத்தின் உரிமைக்கு கொடியேந்தி முழக்கம் இடுவதிலே சிகரம். ஒடுக்கப்பட்டவர்களின் விடியலுக்காக ஏங்கிய உள்ளம். சாதி மறுப்பு போராட்டங்களை முன்னின்று நடத்திய தீரர். அனைத்து பிரச்சனைகளிலும் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்கும், இந்திய உபகண்டத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் மதச்சார்பின்மையை நிலைநாட்டுவதற்கும், சாதி பிணக்குகள் அடியோடு அகற்றுவதற்கும் சமத்துவம் தளைப்பதற்கும் சமூக நீதி மலர்வதற்கும் பாடுபட்டவர். கம்யூனிஸ்ட் அறிக்கையில் சொன்னது போல அடிமை விலங்குகளைத் தவிர நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை என்பதை ஆழமாக நெஞ்சிலே பதிய வைத்துக்கொண்டு தன் மொத்த வாழ்க்கையையும் லட்சியத்துக்காகவும் ஏற்றுக்கொண்ட இயக்கத்துக்காகவுமே அர்ப்பணித்த ஒழுக்க சீலர் உத்தமர் அம்மாமனிதன் வாழ்நாள் போராளி எங்கள் நெஞ்சத்தில் அணையாத தீபமாக ஒளி வீசிக் கொண்டே இருப்பார்.
அவருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு எல்லோரும் புரட்சி குடும்பத்தில் எல்லோரும் செங்கொடி வீரர்கள்தான். எல்லோரும் அண்ணன் பாதையில் நடக்கிறவர்கள் தான். அந்த குடும்பத்தினருக்கு உற்றார் உறவினருக்கும், இதில் உறவினர்கள் என்பவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் தோழர்கள் தான். அத்தனை பேருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைமை நிர்வாகிகளுக்கும் வீரச் செங்கொடி ஏந்திடும் காம்ரேடுகளுக்கும் நான் கண்ணீர் அஞ்சலியை வீர வணக்கத்துடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே தெரிவித்துக் கொள்கிறேன் நீடு வாழ்க அண்ணன் நல்லகண்னு அவர்களுடைய கீர்த்தியும் புகழும்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/26/vaiko-nallakannu-respect-2026-02-26-11-15-26.jpg)