மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடந்த 21.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாம்களை சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , இன்று (02.08.2025) தொடங்கி வைக்க உள்ளார்.
ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 இலட்சத்திற்குக் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம்வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன.
40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்களில் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்பட உள்ளன.