திருநாவுக்கரசர் அமைச்சராக இருந்த போது 1981 ம் ஆண்டு அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் கிராமப்புற மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக 40 ஏக்கர் பரப்பளவில் பாலிடெக்னிக் கல்லூரியும் 10 ஏக்கர் பரப்பளவில் விடுதிகள், ஆசிரியர்கள் குடியிருப்புகளையும் உருவாக்கப்பட்டது.
அத்தனையும் இன்று வரை கம்பீரமாக நிற்கும் கருங்கல் கட்டிடங்கள். புதுக்கோட்டை மாவட்டத்திற்கான முதல் அரசு பாலிடெக்னிக் இதுவே. பல ஆயிரம் பேரை படிக்க வைத்து பல துறைகளிலும் சாதிக்க வைத்த பாலிடெக்னிக் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் என்ற பெயரை பெற்றுள்ளது. அதனால் இங்கு சேர போட்டி போட்டு விண்ணப்பித்து இடம் கிடைக்காமல் போனர்கள் ஏராளம். ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகு பாலிடெக்னிக்கில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நிலையில் தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு பாலிடெக்னிக்களில் முன்மாதிரி அரசு பாலிடெக்னிக் அறந்தாங்கி என்பதை உருவாக்கி இருக்கிறார் தற்போதைய கல்லூரி முதல்வர் குமார்.
அதற்காக தமிழ்நாடு அரசு "நல் ஆசான்" விருதை அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குமார் உள்பட 6 பாலிடெக்னிக் முதல்வர்கள் உள்பட பல விரிவுரையாளர்களுக்கு அறிவித்து இன்று திங்கட்கிழமை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விருது வழங்கி பாராட்டினார். அதே போல சேர்க்கையை அதிகரித்தமைக்கான பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இதே போல 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு சேர்க்கை உயர்வுக்கான பாராட்டுச் சான்று பெற்றுள்ளனர்.
எதற்காக இந்த "நல் ஆசான்" விருது கிடைத்தது?
அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2006 ல் இருந்து சிவில் பிரிவு ஆசிரியராக இருந்த குமார் கடந்த 2023 ஜூன் முதல் நாளில் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நாட்களில் தனது நண்பரான பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணியை பார்க்க அவரது பள்ளிக்குச் சென்ற முதல்வர் குமார் பள்ளி வளாகம், வகுப்பறைகளைப் பார்த்து வியந்துள்ளார்.
அழகான பூங்கா போல வளாகம், குளிரூட்டப்பட்ட தொடு திறன் வகுப்பறைகள், கண்காணிப்பு கேமராக்கள், அனைத்து வகுப்புகளிலும் ஒலி பெருக்கி பளபளக்கும் டைல்ஸ் தரைகள் இத்தனையும் பார்த்தவர் அரசுப் பள்ளியில் எப்படி இத்தனை வசதிகளும் கிடைத்தது? என்று தலைமை ஆசிரியரிடம் கேட்க தலைமை ஆசிரியர் ஜோதிமணி சொன்ன பதில்.. எல்லாம் பெற்றோர்கள், கொடையாளர்கள், முன்னாள் மாணவர்களால் சாத்தியமானது என்று கூறியுள்ளார்.
பச்சலூர் பள்ளியைப் போல அதிநவீன வசதிகளுடன் நம் கல்லூரியை ஹைடெக் அரசுக் கல்லூரியாக மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தில் இருந்த முதல்வர் குமாருக்கு வாழ்த்துச் சொல்ல வந்த தனது பழைய மாணவர்களிடம்.. நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்வதைவிட நீங்கள் படித்த கல்லூரி வகுப்பறையை குளிரூட்டப்பட்ட திறன் வகுப்பறையாக மாற்றித்தர வேண்டும் அதுவே நீங்கள் படித்த கல்வி நிறுவனத்திற்கு செய்யும் பலனாக இருக்கும் என்று சொல்ல அந்த (பழைய மாணவர்கள்) இளைஞர்கள் சரி என்று சொன்னதோடு சில வாரங்களிலேயே வகுப்பறையை நவீனமாக மாற்றி அமைத்தனர்.
அதேபோல ஒவ்வொரு பிரிவில் இருந்து தானாக முன் வந்த முன்னாள் மாணவர்கள் ஒரு வருப்பறைக்கு தலா ரூ.5 லட்சம் செலவு செய்து குளிரூட்டப்பட்ட திறன் வகுப்பறைகளாக மாற்றி அமைத்தனர். பச்சலூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணியும் திறன் வகுப்பறை வழங்கினார். அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஸ்மாட்ர் போர்டு வழங்கினார். அரசு கல்லூரி ஆசிரியர்கள் பங்களிப்போடு பல வகுப்பறைகள் மாற்றப்பட்டு தற்போது 20 வகுப்பறைகளும் குளுகுளு ஏசியுடன் கூடிய திறன் வகுப்பறைகள், சாக்பீஸ் இல்லாத வெள்ளை போர்டுகள், பேன், தூய குடிநீர், பேட்டரிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு தமிழ்நாட்டிலேயே முதல் அதிநவீன அரசு பாலிடெக்னிக் என்பதை நிரூபித்துள்ளது. விரைவில் விளையாட்டு அரங்கத்தையும் எதிர் நோக்கி உள்ளது. மேலும் புதர் மண்டிக்கிடந்த சுற்றுப்புறத்தையும் முன்னாள் மாணவர்கள் உதவியோடு சுத்தம் செய்து கொய்யா, மா, பலா, வாழை, முந்திரி, திராட்சை என 50 க்கும் மேற்பட்ட வகையான 1000 பழமரக்கன்றுகள். மூலிகை தோட்டம், ஊட்டி ரோஜா உள்பட 50 வகையான 500 பூ செடிகளும் வளர்க்கப்படுவதுடன் சுற்றுவளாகத்தை சுற்றி நடை பாதை அமைத்து பாதை ஓரத்தில் தென்னை, பலா, மா என பலவகையான நீண்ட காலம் பலன் தரும் மரங்களும், காய்கறிக் செடிகளும் வளர்க்கப்பட்டு பசுமையை நோக்கி செல்கிறது. நிலத்தடி நீரை சேமிக்க மழைநீர் சேமிப்பு குட்டையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் அறிந்த புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் நிர்வாகம் தீ தடுப்பு மற்றும் தையல் போன்ற சான்றிதழ் வகுப்புகளையும் நடத்தி பலருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிநவீனமாக மாற்றப்பட்ட அறந்தாங்கி அரசுப் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குமாரைப் போல தமிழ்நாட்டில் உள்ள மற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மாற்றம் செய்ய முயற்சி செய்யலாம் என்று துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தான் சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்க நல்லாசிரியர் விருது வழங்குவது போல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் "நல் ஆசான்" விருது வழங்க அரசு முடிவு செய்து அதற்கான தேர்வுகள் நடந்த நிலையில் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குமார், "முன்னாள் மாணாக்கர்களுடன் இணைந்து கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதற்காக" நல் ஆசான் விருதுக்கான விருதாளராக தேர்வு செய்யப்பட்டு இன்று சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் கோவி.செழியன் "நல் ஆசான்" விருது வழங்கி பாராட்டியுள்ளார். இதன் பிறகு தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும் முன்னாள் மாணவர்கள், கொடையாளர்கள் மூலம் நவீனமயமாகும் என்கின்றனர் கல்வியாளர்கள்.