ஈஷா அறக்கட்டளையானது, வேண்டுமென்றே தொலைதூர இடத்தில் வழக்கை நடத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டின் முன்னணி புலனாய்வுப் பத்திரிகைகளில் ஒன்றான நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் உறுதியான சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தில் நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் தாக்கல் செய்துள்ள இடமாற்ற மனுவில், டெல்லியில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஈஷா அறக்கட்டளையால் தொடுக்கப்பட்ட வழக்கை, அங்கிருந்து தமிழ்நாட்டிலுள்ள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரியுள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையாக அமைந்த நிகழ்வுகள், அறிக்கைகள் மற்றும் விஷயங்கள் என அனைத்துமே தமிழ்நாடு மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளின் எல்லைக்குள் நடந்ததாக நக்கீரன் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக சமர்ப்பித்துள்ளது. மேலும், கேள்விக்குரிய புலனாய்வுச் செய்திகள் அனைத்தும் தமிழ்நாடு மாநில எல்லைக்குள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், சட்ட உரிமைகளை இழந்த ஈஷா அறக்கட்டளை நக்கீரன் இதழை துன்புறுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவது போன்ற மறைமுக நோக்கத்துடன் தான் தங்கள் வழக்கை நடத்த டெல்லி உயர் நீதிமன்றத்தை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.
நக்கீரன் தாக்கல் செய்த மனுவின் முதல் பார்வையிலேயே திருப்தியடைந்த இந்திய உச்ச நீதிமன்றமானது, மே 13, 2025 அன்று ஈஷா அறக்கட்டளைக்கு பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியது. அநீதிக்கு எதிராகத் துணிச்சலோடு செய்திகளை வெளியிடும் உரிமையைப் பயன்படுத்தும் ஊடக நிறுவனங்களைக் குறிவைத்து நீதித்துறை நடவடிக்கையை, சட்டப்பிரிவுகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்த தனது கவலைகளை, உச்ச நீதிமன்றத்தின் தலையீடு சுட்டிக்காட்டுகிறது.
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனமானது, பத்திரிகை சுதந்திரத்தை நிலைநிறுத்துவதிலும், பொது நலன் சார்ந்த செய்திகளை அம்பலப்படுத்துவதிலும் அதன் அசைக்கமுடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. இந்நிறுவனமானது, அலைக்கழிக்கும் வழக்குகள் மூலமாகத் தரப்படும் நெருக்கடிகள் மற்றும் மிரட்டல்களுக்கு அடிபணியாமல், நீதித்துறையின் செயல்பாட்டில் முழு நம்பிக்கைய வெளிப்படுத்துகிறது. மேலும், சரியான அதிகார வரம்புக்குள் அமைந்த நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும், நீதி வெல்லுமென்றும் உறுதியாக நம்புகிறது.