கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடிகர் விஜயின் பிரச்சாரத்தின் போது 41 அப்பாவிகள் பரிதாபமாகப் பலியானார்கள். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு, அதிர்வலைகளையும் கிளப்பியது. ஒருபக்கம் தமிழக அரசு கரூர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், மறுபுறம் த.வெ.க.வினர் தற்போது வரை கரூர் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை. குடியரசுத் தலைவர் முதல், சாதாரண மக்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்த பிறகு கடைசி ஆளாக விஜய் வீடியோ ஒன்று வெளியிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
அதிலும், நடந்த சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்கவும் இல்லை; பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. அதன்காரணமாக, விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் கடுமையாகக் கிளம்பின. ஒன்றுமே அறியாத தங்களின் ஆதர்ச நாயகனைப் பார்க்க மட்டுமே கூடிய கூட்டத்தில் 41 அப்பாவி உயிர்களைப் பறிகொடுத்துவிட்டு, அவர்களது குடும்பத்தினர் தற்போதுவரை மீள முடியாத துயரத்தில் தவிக்கின்றனர். ஆனால், தற்போதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க கூட விஜயோ, அல்லது அவரது கட்சியினரே சொல்லவில்லை.
இதயம் உள்ளவர்கள் அனைவரும் விஜயையோ, அவரது பிரச்சாரத்தையோ விமர்சிக்கத்தான் செய்வார்கள். அந்த வகையில் தான், விஜயின் ஆணவத்திற்கு எதிராகவும், மமதையைக் கண்டித்தும் காணொளி மூலம் நக்கீரன் ஆசிரியர் தனது ஆழமான கருத்தை வெளிப்படுத்தினார். அதில், நக்கீரன் ஆசிரியர் வைத்த வாதங்கள், விவரித்த காட்சிகள், அம்பலப்படுத்திய ஆதாரங்கள் அனைத்தும் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்தது. பலரும் சமூக வலைதளங்களில் அந்த வீடியோவைப் பகிர்ந்தனர். அதேபோல, கரூர் துயரச் சம்பவம் குறித்து மற்ற ஊடகங்களுக்கு நக்கீரன் ஆசிரியர் கொடுத்த பேட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்க்கு எதிராக விமர்சனத்தை மக்கள் முன் நக்கீரன் ஆசிரியர் தொடர்சியாகப் பதிவு செய்வதை விஜயின் ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், நக்கீரன் ஆசிரியருக்கு எதிராகப் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (6.10.2025) இரவு நக்கீரன் அலுவலகத்திற்கும், ஆசிரியரின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இத்தகைய மிரட்டல்கள் வருவதை அறிந்த உளவுத்துறையினர், உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவுப் பிறப்பித்துள்ளனர். அதேசமயம் அருப்புக்கோட்டையில் உள்ள ஆசிரியரின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணனின் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
நக்கீரனின் 38 ஆண்டுகாலத் தொடர் பயணத்தில் இது போன்றப் பல மிரட்டல்களை எதிர்கொண்டு நெருப்பாற்றில் நீந்திக் கடந்து வந்திருக்கிறது. விஜய்த் தரப்பிலிருந்து வரும் மிரட்டல்களையும் நக்கீரன் எதிர்கொள்ளும். நக்கீரன் அலுவலகத்திற்கும், நக்கீரன் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கும் தமிழக காவல்துறை ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.