Nakkheeran Editor condoles the passing of Comrade Nallakannu
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) வயது மூப்பு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (25-02-26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய அனைத்து தரப்பு மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த தோழர் நல்லகண்ணுவின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நக்கீரன் ஆசிரியர், தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நேர்மையின் கடைசி அத்தியாயம், தியாகத்தின் கடைசி அத்தியாயம், எளிமையின் அத்தியாயம் இன்று நம்மை விட்டு போய்விட்டது. தோழர் நல்லகண்ணு வாழ்ந்த காலத்தில் நாமெல்லாம் வாழ்ந்தோம் என்பது மிகப்பெரிய பெருமை. இன்னொரு நல்லகண்ணு பெயருக்கேற்றார் போல் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிச் சென்றுள்ளார். அவர் வழியில் நாம் எல்லோரும் நேர்மையுடன் எளிமையாகவும், அதே நேரம் அவர் கொள்கைப் பிடிப்பை கையில் ஏந்தி பாடுபடுவோம். அவருக்கு நக்கீரன் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்தார்.
சிபிஐ அலுவலகத்தில் நாளை 4 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட தோழர் நல்லகண்ணுவின் உடல், அவரது விருப்பப்படியே சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us