பகவான் ஸ்ரீராமருடன் என்னை ஒப்பிட்டு பதாகை வைக்க வேண்டும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அக்கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக பா.ஜ.க சார்பில் திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூரில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நேற்று (22.08.2025) நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி மாநாடு, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த மாநாட்டில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்.
இந்த மாநாட்டின் போது, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை கடவுள் ராமர் போல் சித்தரித்து, அவர் கையில் வில்லையும் அம்பையும் வைத்திருப்பது போன்ற பேனர் ஒன்று பா.ஜ.க தொண்டர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரில் இடம்பெற்றிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பகவான் ஸ்ரீராமருடன் என்னை ஒப்பிட வேண்டாம் என நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “நேற்று பகவான் ஸ்ரீ இராமருடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகளில் போட்டிருப்பதாக அறிந்தேன். அதனை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இறைசக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது என்று ஆணித்தரமாக நம்புபவன் நான். சேது சமுத்திரம் விவகாரத்தில் இராமபிரானைக் குறித்து தவறான முறையில் பேச்சுகள் வந்தபோது, சட்டமன்றத்திலேயே கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்தவன் நான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் தாயாரைக் குறித்து சர்ச்சைப் பேச்சு எழுந்தபோதும், முதலில் அதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான்.
நமது தெய்வங்களின் மீது நான் வைத்திருக்கும் பக்தியும், மரியாதையும் இவ்வாறாக இருக்கும்போது, என்னை வைத்தே இவ்வாறு சித்தரித்து புகைப்படம் வெளியிடுவதை நான் மிகக்கடுமையாக கண்டிக்கிறேன். இன்னொரு முறை இது போல நடக்காமல் இருப்பதை அன்பார்ந்த தாமரை சொந்தங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.