'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 155க்கு மேற்பட்ட தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைத்திருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது. அதேநேரம் டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தது அதிமுகவில் பேசுபொருளாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுடன் சந்திப்பு மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை தொடங்கி வைக்க வந்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி உடனான இந்த சந்திப்பில் தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.