கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த சம்பவத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிப்பதற்கு எதிராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதே சமயம் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (13.10.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இது குறித்து நீதிபதிகள், “ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ மாதந்தோறும் அறிக்கை தர வேண்டும். விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை அஜய் ரஸ்தோகி முடிவு செய்யலாம்” எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்’ எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய கரூர் துயரத்தின் பின்னணியை சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமென்ற வலுவான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்புப் குழுவையும் அமைத்துள்ள உச்சநீதிமன்றத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிறுவ, எதிர்தரப்பினரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்திற்குக் கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்திற்குப் பின்னால் ஏதோவொரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது. தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் கருணையின்றி தண்டிக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.