தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. இருப்பினும், தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வருகிறது. மேலும் அக்கட்சி திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தேமுதிகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடங்கள் கொடுக்க வேண்டும் என்று அக்கட்சி விடாப்பிடியாக இருப்பதாலும் அதற்கு இரு கட்சிகளும் சம்மதம் தெரிவிக்காததாலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தேமுதிகவுடன் பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (11-02-26) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், தேமுதிக உடனான கூட்டணி குறித்த கேள்விக்குப் பதிலளித்தார். அதில் அவர், “நாங்கள் இதுவரை தேமுதிகவுடன் எந்த விதமான கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை. தேமுதிக நிர்வாகி சுதீஷ் எனது நீண்ட கால நண்பர். அதனால் குடியரசு தினத்தில், சுதீஷுடன் நான் பேசியது நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தை மட்டுமே தானே தவிரக் கூட்டணி பேச்சுவார்த்தை அல்ல. சுதீஷுடன் மத்திய அமைச்சர் எல் முருகன் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்துப் பேசு வருவது பற்றி திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றோம். மேலும், ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று நாங்கள் அதிமுகவை நிர்ப்பந்திக்கவில்லை. பிரேமலதா பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேசிவருகிறாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. இதைப் பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். வருகின்ற ஒன்றாம் தேதி பிரதமர் தமிழ்நாட்டிற்கு வர இருக்கிறார். அப்போது தான் கூட்டணி குறித்தான இறுதி நிலை அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/11/nainarnage-2026-02-11-22-42-14.jpg)