அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (09-01-26) சந்தித்துப் பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு இன்று நயினார் நாகேந்திரன் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு 56 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அமித் ஷா கேட்டதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பை முடித்துவிட்டு நேற்று எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பிய நிலையில், இன்று அவரை நயினார் நாகேந்திரன் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அதிமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்திருக்கிறது. பிரதமர் மோடி தமிழக வருகையை ஒட்டி ஆலோசித்தோம். கூட்டம் சென்னையில் நடத்துவதா அல்லது மதுரையில் நடத்துவதா என்பதை ஆலோசித்தோம். பிரதமர் இம்மாத இறுதியில் தமிழகம் வர இருக்கிறார். பா.ஜ.கவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை பின்னர் சொல்கிறேன்” என்று கூறினார்.