‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ பாஜக பிரச்சார யாத்திரை  விருதுநகரில் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக  தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் அங்கு நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

Advertisment

பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் பேசியபோது –  “பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உண்மையில் பொண்டாட்டி, பிள்ளைகள்  கிடையாது. அவர் பெரிய கோடீஸ்வரர். ஆனால், இன்றைக்கு வேட்டி  சட்டையோடு இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். 10  வருடம் மத்திய அமைச்சராக இருந்தார். இப்பவும் பஸ் ஏறித்தான் போக  வேண்டியுள்ளது. நாகர்கோவிலில் சொத்தையெல்லாம் வித்தாச்சு.  இப்படிப்பட்ட கட்சிதான் பாஜக.

Advertisment

ஒவ்வொரு பிள்ளையும் படிக்கவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டவர் காமராஜர் அவர்கள். ஆனால்,  திமுக ஆட்சி  பொறுப்பேற்ற பிறகு, இந்த விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1500  பிள்ளைகள் பிளஸ் 2 படிக்க முடியாமல், தங்களது படிப்பை பாதியில்  நிறுத்திவிட்டனர். கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த மாவட்டத்தில் இப்படி நடக்கிறது என்று சொன்னால், எவ்வளவு ஒரு மோசமான  சூழ்நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அருப்புக்கோட்டையும் ராஜபாளையமும் நெசவாளர்கள் அதிகமாக  வசிக்கும் பகுதி. நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம் மூலம் வட்டியைக்  குறைப்போம் என்று சொன்னார்கள். குறைத்தார்களா என்றால் இல்லை.

மத்திய அரசு ₹14,83,000 கோடி ரூபாய் தமிழகத்துக்குத் தந்துள்ளது. ஆனால்,  தமிழகத்தில் ஆட்சி நடத்தும்  திமுக அரசு, "ஒன்றுமே தரவில்லை..  ஒன்றுமே தரவில்லை" என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. ரேஷன் கடையில் அனைத்துப் பொருள்களையும் இலவசமாகக்  கொடுப்பது மத்திய அரசு. அதை மாநில அரசு கொடுப்பதுபோல் ஸ்டிக்கர்  ஒட்டி வைக்கிறார்கள். பிரதம சாலைத் திட்டத்தில், 13,500 கோடி ரூபாய்  செலவில்  102 சாலைகள் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 'மோடி வீடுகள்' கொடுக்கப்பட்டுள்ளன. 69 ஆயிரம் விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தரப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில்  73,083 பேர் உதவி பெற்றுள்ளனர். 

Advertisment

முன்னேறும் மாவட்டங்களில் விருதுநகர் இருக்க வேண்டும் என்பதற்காக,  PM மித்ரா யோஜனா திட்டத்தில், மற்றும் பிற பிரதம மந்திரி   திட்டங்களில் மத்திய அரசு நிதி தந்துள்ளது என்று சொன்னால்   மிகையாகாது.  பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக, இதே ஊரில், ஒரு லட்சம் பேருக்கு  வேலை கிடைக்கும் வகையில், இன்றைக்கு ஜவுளித் திட்டத்தைக் (PM Mitra  Park) கொண்டு வந்ததும் மத்திய அரசுதான். இவ்வளவு பெரிய திட்டங்களை  மத்திய அரசு தந்துள்ளது. அதற்குக் காரணம் பிரதமர் நரேந்திர மோடி.   இங்கே  விருதுநகர் மருத்துவக் கல்லூரி வந்துள்ளது. தமிழகத்தில்  ஒட்டுமொத்தமாக 11 மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளன. 11 மருத்துவக்  கல்லூரிகளைக் கொடுத்தது பிரதமர் நரேந்திர மோடி.  அதைப் பெற்றுத்  தந்தது, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நமது அண்ணன் எடப்பாடி  பழனிச்சாமி.   

இப்படியாக, மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செயல்பட்டால்தான்  எல்லா விஷயங்களையும் பெற்றுத் தரமுடியும். ஆனால், தமிழ்நாடு  அரசாங்கம், மத்திய அரசாங்கத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து  வருகிறது.   எந்தவொரு மத்திய அரசுத் திட்டமும் இங்கு வரவேண்டும் என்று  சொன்னால், அதற்கு மத்திய அரசுடன் மாநில அரசு ஒத்துப்போனால்தான்  செய்ய முடியும். தற்போதைய சூழ்நிலையில், மத்திய அரசு திட்டங்களை  மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாது.”  என்றார்.