அரசுப் பள்ளி கழிப்பறைகளை சீர்படுத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூர் மாவட்டம் கீழக்கல் பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயன்படுத்த இயலாத நிலையில் கழிப்பறை இருப்பதால், திறந்தவெளியில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற 9ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் விழுந்து பலியானதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
128 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை தான் இருக்கும் உண்மையை அறிக்கை ஒன்று (UDISE+) வெளிப்படுத்திய நிலையில், தற்போது ஒரு வளரிளம் பருவ மாணவன் பலியாகி இருப்பது பள்ளிக்கல்வித்துறையின் கோர முகத்தை மீண்டுமொருமுறை பட்டவர்த்தனமாக்கியுள்ளது. அரசுப்பள்ளியில் அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதி கூட இல்லாமல் மாணவர்களைத் தவிக்கவிடுவதும், திறந்தவெளியைத் தேடி அலையவிடுவதும் தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?. இதுபோன்று அரசுப்பள்ளிகளில் உள்ள பயன்படுத்த இயலாத கழிப்பறைகளால் எத்தனை பெண் குழந்தைகளின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது?.
மோசமான கழிப்பறையால் இயற்கை உபாதையைக் கழிக்காமல் எத்தனை அரசுப்பள்ளி மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது?. இதுபோன்ற பல முக்கிய வினாக்கள் திமுக அரசின் முன் இருக்கையில், அதனை கவனிக்காது விளம்பரங்களில் மட்டுமே மும்முரமாய் இருக்கிறது திராவிட மாடல். எஞ்சியிருக்கும் எட்டு மாத ஆட்சிக் காலத்தில் உங்களுடன் ஸ்டாலின் என அரசு வரிப்பணத்தை சுயவிளம்பரத்திற்காக செலவழிப்பதை விட்டு, ஏழை நடுத்தர மாணவர்களின் உடல்நலத்தையும் உயிரையும் காக்கும் விதமாக அரசுப் பள்ளி கழிப்பறைகளை சீர்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.