திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சுவாமிநாதன் கடந்த 1ஆம் தேதி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான கடந்த 3ஆம் தேதி, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றியதால் இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இதல் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

Advertisment

இதையடுத்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோர் தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. 

Advertisment

இந்த சூழ்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்பதால் மதுரையைச் சேர்ந்த நபர் நேற்று முன்தினம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை மாஅவட்டம் நரிமேடு மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த பூர்ண சந்திர என்பவர், நேற்று முன்தினம் மதுரை அவுட்போஸ் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்திற்குள் சென்று பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பூர்ண சந்திரன் தனது செல்போனில் ஆடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அது ஏற்றப்படவில்லை. இதனால் நான் உயிரை மாய்த்துக்கொள்ள போகிறேன். திருப்பரங்குன்றம் மலையில் தற்கொலை செய்துகொள்ள தான் நினைத்தேன். ஆனால், கோயிலுக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்பதற்காக கடவுளே இல்லை என்று சொன்ன பெரியார் சிலை முன்பு கடவுளுக்காக எனது உயிரை மாய்த்துக்கொள்ள போகிறேன்’ என்று உருக்கமாகப் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு, பா.ஜ.க தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தற்கொலை செய்துகொண்ட பூர்ண சந்திரன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், பா.ஜ.க சார்பில் அந்த குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மதுரை மாநகர மாவட்ட பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, பூர்ண சந்திரன் தற்கோலை விவகாரத்தை தங்களது அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க பயன்படுத்துவதாக பூர்ண சந்திரனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும், இது தொடர்பாக அங்கிருந்த பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினருக்கும், பூர்ண சந்திரனின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் ‘அரசியல் செய்கிற இடமா இது’ என்று உறவினர்கள் கோபத்துடன் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த
பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.