அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இன்று (07.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.   அப்போது அவர் எடப்பாடி பழனிசாமி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

Advertisment

குறிப்பாக அவர் பேசியதாவது, “நாடாளுமன்ற தேர்தலில் நமக்காக யாரெல்லாம் உதவி செய்தார்களோ,  எந்த காலகட்டத்தில் நமக்காக வழிவகை  செய்தார்களோ அவர்களையெல்லாம் மறந்து  அவர்களுக்கு  நிற்பதற்கு  அனுமதி வழங்காமல் புதிதாக வேறு கட்சியில் இருந்து வந்து பணம்  செலவு செய்தால் போதும் என்று  அவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில்  நிற்பதற்கு அனுமதியை வழங்கினார். தன்னை முதல்வராக்கிய சசிகலாவை எடப்பாடி பழனிசாமி கொச்சையாகப் பேசினார்.   கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது என்று எடப்பாடி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். ஆனால், அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

Advertisment

அதோடு  மட்டுமல்லாமல், இன்றைக்கு இவர் கட்சியை  நடத்தவில்லை. இவர் கட்சியை நடத்தவதை விட  இவருடைய மகன், இவருடைய மாப்பிள்ளை  இவருடைய மருமகன், இவருடைய அக்கா மகன் தான்  நடத்துகிறார்கள். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று என்னை அழைத்தது பா.ஜ.க தான். பிரிந்து இருப்பவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்குமாறு பா.ஜ.கவே அறிவுறுத்தியது. அதன் பேரில் தான் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை சந்திக்கச் சென்றேன்” என்று கூறினார். இவருடைய பேச்சு தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், செங்கோட்டையன் பின்னணியில் திமுக இருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நயினார் நாகேந்திரனிடம், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பா.ஜ.க கூறியதன் பேரில் தான் இருவரையும் சந்தித்தேன் என செங்கோட்டையன் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யார் அவரிடம் பேசினார்கள், யார் சொன்னார்கள் என்ற விவரத்தை அவர் சொல்லவில்லை. அப்படி சொல்லாத பட்சத்தில் அதில் கருத்து கூற முடியாது. அவருடைய பேட்டியை நான் பார்த்தேன். 6 பேர் போனோம், ஒன்றிணைக்க சொன்னோம் என்று சொன்னார். அந்த 6 பேர் யார் என்று தெரியவில்லை. யார் ஒருங்கிணைக்க சொன்னோம் என்பதை அவர் தெளிவாக சொல்லவில்லை. செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் இருக்கும் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது” என்று கூறினார். 

Advertisment