Nainar Nagendran arrested and Tension in Thiruparankundram for the 2nd day
கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான நேற்று (04-12-25), திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்று இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இதல் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், போலீசார் உள்பட பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, போராட்டம் செய்த இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை அம்மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியது.
இந்த சூழ்நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம ரவிக்குமார் நேற்று மாலை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு மீதான விசாரணை இன்று (04-12-25) மாலை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வந்தது. அப்போது அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, மதுரை ஆட்சியரின் 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இன்று திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், உத்தரவை நிறைவேற்றிய நகலை நாளை காலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கு விசாரணையை நாளை காலை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று (04-12-25) தீபமேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் ஏராளாமானோர் திருப்பரங்குன்றத்துக்கு குவிந்து மலை ஏறி தீபம் ஏற்ற முயன்றனர். அப்போது, 144 ரத்து உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது, அதனால் அங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனாலும், பா.ஜ.க தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கலைந்து செல்லவில்லை என்றால் கைது செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்த நிலையில், போலீசாருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறி நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க தொண்டர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் 2வது நாளாக மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Follow Us