கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூன் 31ஆம் தேதி வெளியான படம் தெலுங்கு படம் ‘கிங்டம்’. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ் மற்றும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியது.

இப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தில் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனம் தெரிவித்து படம் திரையிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்தார். மேலும் அப்படி திரையிட நிறுத்த தவறும்பட்சத்தில், திரையரங்குகளை முற்றுகையிட்டு, படத்தைத் தடுத்து நிறுத்துவோமெனவும் எச்சரித்திருந்தார். அதன் படி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், வேலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிங்டம் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் வேலூர் அண்ணா சாலையில் உள்ள திரையரங்கத்தை முற்றுகையிட்டு, போஸ்டர் மற்றும் பேனர்களை கிழித்து  தீயிட்டு கொளுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நாளையும் படம் ஓடுனால் திரையங்கு உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.