2018ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினரும் மதிமுகவினரும் மோதிக்கொண்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிற நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரே விமானத்தில் திருச்சிக்கு வந்தனர். அப்பொழுது விமான நிலையத்தில் இருவரையும் வரவேற்க இருகட்சி தொண்டர்களும் கூடினர். அப்போது நாம் தமிழர் கட்சியினருக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
திருச்சியைச் சேர்ந்த மதிமுகவினர் நாம் தமிழர் கட்சியின் சீமான் மீதும், அக்கட்சி நிர்வாகிகள் மீதும் காவல்துறையில் புகார் அளித்தனர். அதேபோல் நாம் தமிழர் கட்சியினரும் மதிமுவினர் மீதும் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த வழக்கில் நேரில் ஆஜராகி உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு வழங்க இருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.