N. Anand meets Puducherry Chief Minister again and requests permission for road show
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதனை விசாரித்த நீதிமன்றம், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு தமிழக அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனால், அரசியல் கட்சிகளின் கூட்டத்துக்கு நெறிமுறைகளை வகுப்பதற்காக அரசியல் கட்சிகளின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இத்தகைய சூழலில், வரும் 5ஆம் தேதி (02.12.2025) புதுச்சேரியில் த.வெ.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், ‘ரோடு ஷோ’ நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காலாப்பட்டு முதல் கன்னியகோவில் வரை ரோடு ஷோ செல்லவும், சோனாம்பாளையத்தில், வாகனத்தில் இருந்தபடி விஜய் பேசவும் முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதற்கு அனுமதி கேட்டு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடமும், டி.ஜி.பி., அலுவலகத்திலும் த.வெ.க., நிர்வாகிகள் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி மனு கொடுத்தனர். இருப்பினும் இது குறித்து போலீசார் எந்த பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமியை தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் சந்தித்து ரோடு ஷோக்கு அனுமதி கோரிய நிலையில், இது தொடர்பாக ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து, புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம் நடத்தலாம், ஆனால் ரோடு ஷோக்கு அனுமதி கிடையாது என புதுச்சேரி காவல்துறை நேற்று தெரிவித்திருந்தது.
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய், ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் உள்ள தலைமை செயலகத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் இன்று (03-12-25) மீண்டும் சந்தித்துப் பேசினார். அதில், நாளை மறுநாள் (05-12-25) விஜய் ரோடு ஷோ மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று என்.ஆனந்த் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.
Follow Us