திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2024 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இத்தகைய சூழலில் ஜெயகுமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக தனிப்படைகள் அமைத்து மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அது பலனளிக்காமல் போனது.

Advertisment

முன்னதாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஜெயக்குமார் தனது கைப்பட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்தக் கடிதத்தில், ‘திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அவர்களால் தனது உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து இந்த  வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்லையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அதே கரைசுத்துபுதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment