புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விஜயசுந்தரம். இவரது மகன் மதன்குமார் (வயது 18). இவர் +2 படிப்பை முடித்த நிலையில், புதுக்கோட்டை அருகே வம்பனில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்து விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.
நேற்று (17.11.2025) மாலை மதன்குமாரின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், அவரது மகன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பெற்றோரும் உறவினர்களும் கல்லூரி விடுதிக்குச் சென்று பார்த்த போது, ஜன்னல் கம்பியில் கட்டப்பட்ட நைலான் கயிற்றில் மதன்குமாரின் உடல் தரையில் படுத்த நிலையில், கைகள் தரையில் ஊன்றியபடி சடலமாகக் கிடந்தது. இதனைக் கண்ட உறவினர்கள், “இப்படித் தரையில் படுத்த நிலையில் எப்படித் தூக்கில் தொங்கி இறக்க முடியும்?” என்று சந்தேகம் எழுப்பினர்.
சம்பவ இடத்துக்கு வந்த கண்ணனூர் நகர் காவல் நிலைய போலீசார் மதன்குமார் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இன்று காலை கண்ணனூர் நகர் காவல் நிலையத்தில் மதன்குமாரின் பெற்றோர் அளித்த புகாரில், மகனின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், ஜன்னல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் உடல் தரையில் படுத்திருப்பதாலும், கைகள் ஊன்றிய நிலையிலும் இருப்பதால் மேலும் சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தனர். எனவே கல்லூரி நிர்வாகம், விடுதி நிர்வாகம் ஆகியோர்மீதும், மதன்குமார் இறப்புக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியுள்ளனர்.
மேலும் மதன்குமாரின் உறவினர்கள் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வம்பன் தனியார் வேளாண் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போலீசாரும் அதிகாரிகளும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/18/4-2025-11-18-18-00-59.jpg)