Mystery cleared up by medical report Woman who fainted and lost in bathroom
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள பிரபல தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் இளம் பெண் ரஞ்சிதா. இவர் கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி நண்பரின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார். அதன்படி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமயத்தில் சிக்மங்களூர் தாலுகாவில் உள்ள ஹண்டி மச்சந்தனஹள்ளியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.
அப்போது, குளிப்பதற்காகக் குளியலறைக்குள் சென்ற ரஞ்சிதா நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இது குறித்து விடுதி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வரத் தாமதம் ஏற்பட்டதால், நண்பர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ரஞ்சிதா மயக்கமான நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்ட நண்பர்கள் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று ரஞ்சிதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணத்தில், மர்மம் இருப்பதாக இதுநாள் வரை கருதப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான பிரேதப் பரிசோதனை திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, கார்பன் மோனாக்சைடு என்ற விஷ வாயுவின் தாக்கத்தால், ரஞ்சிதா இறந்ததாக மருத்துவ அறிக்கையின் முடிவில் தெரியவந்துள்ளது. அதாவது, குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த வாட்டர் ஹீட்டரில் இருந்து வாயு கசிந்துள்ள நிலையில், குளியலறையில் போதுமான காற்றோட்ட வசதி இல்லாததால், அவர் மூச்சுத் திணறி இறந்திருப்பது தெரியவந்தது.
இதனிடையே, போலீஸ் நடத்திய விசாரணையில் விடுதியில் வாட்டர் ஹீட்டர் பொருத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விடுதி உரிமையாளர் சுதாகர் மீது ஆல்டூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow Us