கோவை அடுத்த போத்தனூர் அருகே, சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் சாலையில் மரப்பட்டறையை நடத்தி வருபவர் கனகராஜ். இவரது பட்டறையில் சேவல்களை வளர்த்து வந்தார். அவர் வளர்த்து வந்த சேவல் திடீரென காணாமல் போனது, அதை அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா பதிவைப் பார்த்தார். அப்போது, அங்கு வந்த டிக்டாக் வாலிபர் ஒருவர் லாபகமாக சேவலைப் பிடிப்பதும், அதை டி-ஷர்ட்டுக்குள் வைத்து அழுத்தியபடி தப்பிச் செல்வதும் தெரிந்தது.
சாலையின் வெளியே உள்ள மற்றொரு கண்காணிப்பு கேமரா பதிவைப் பார்த்தபோது, ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் தயாராக நின்ற நண்பனின் வாகனத்தில் ஏறி, சேவலுடன் திருடன் தப்பும் காட்சியும் பதிவாகியிருந்தது. ஆசையாய் வளர்த்த சேவல் திருட்டுப் போனதால் மனம் உடைந்த கனகராஜ், அதை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என்று, சுந்தராபுரம் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்துடன் புகார் செய்துள்ளார்.
ஆதாரங்களைப் பெற்றுக் கொண்ட காவலர் ஒருவர், "நீ கிளம்பு... நாளைக்கே சேவல் உன் வீட்ல நிக்கும்; திருடன் ஜெயில்ல இருப்பான்" என்று பஞ்ச் பேசி அனுப்பிவைத்தார். வேறு வழியின்றி, சேவல் கிடைத்தால் போதும் என்று கனகராஜ் வீட்டுக்கு திரும்பிவிட்டார்.