திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியகொமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா கோவிந்தராஜ். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவரது கணவர் கோவிந்தராஜ் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா, குடும்பப் பிரச்சனை காரணமாக தனது உறவினரான சந்தோஷ் (20) என்பவரால் கத்தியால் குத்தப்பட்டதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு, தற்போது குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தில் உள்ள தாய்வீட்டில் வசித்து வருகிறார்.
மேலும், நேற்று நள்ளிரவு ஷோபனா கோவிந்தராஜின் இல்லத்தில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் கார் கண்ணாடியை உடைத்ததோடு, வீட்டையும் அடித்து சூறையாடியுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் வீடு மற்றும் கார் கண்ணாடி அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதால் இது போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.