தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற மலை பார்வதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில்  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் மற்றும் நள்ளிரவு நேரங்களில் அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஒன்றாம் ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு, சிறப்பு பூஜைகளை முடித்துவிட்டு, பூசாரி பாண்டி கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். பின்னர் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோயிலுக்கு வந்து பூசாரி, உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்து கோயில் நிர்வாகத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முறப்பநாடு காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர் தலைமையிலான காவல்துறையினர், கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளில், 3 ஆம் தேதி நள்ளிரவில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க கருப்பு நிறமுள்ள மர்ம நபர் ஒருவர், சட்டை அணியாமல், இடுப்பில் கட்டம்போட்ட கைலியுடன், தலையில் ஹெல்மெட் அணிந்து கோயில் வளாகத்திற்கு அருகே நோட்டமிட்டு நடமாடுவது பதிவாகியுள்ளது.

பின்னர், கடப்பாரைக் கம்பியால் கோயில் வளாகக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர், அங்கிருந்த நான்கு உண்டியல்களை உடைத்து, பணத்தை வெள்ளை நிறப் பையில் நிதானமாக அள்ளி, சாவகாசமாகத் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த முறப்பநாடு காவல்துறையினர், உண்டியல் திருடனைத் தேடி வருகின்றனர்.

Advertisment

மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள மலை அடிவாரப் பகுதியில், நள்ளிரவு நேரத்தில் கடப்பாரைக் கம்பியுடன் கோயிலுக்குள் நுழைந்து பக்தர்களின் காணிக்கைப் பணத்தைத் திருடிய இச்சம்பவம் வல்லநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.