கணினி உதவியாளரை வீட்டு வாசலில் வைத்து வெட்டிய மர்ம கும்பல்; கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

103

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தின் பின்புறத்தில் வசித்து வரும் கௌஸ் என்பவரின் மகன் முகமது யாசர், ஆவண எழுத்தர் ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது வீட்டின் அருகே மர்ம நபர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, முகமது யாசர் வீட்டில் மர்ம நபர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டதாகக் கூறப்படுகிறது. தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு, மர்ம நபர்கள் இடுப்பில் வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு முகமது யாசரை அவரது வீட்டு வாசலில் இருந்து துரத்திச் சென்று வீட்டிலேயே வெட்டியதால், முகமது யாசர் பலத்த காயமடைந்தார். இதை அறிந்த உறவினர்கள் கூச்சலிட்டு, பின் துரத்திச் சென்றபோது, மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். தற்போது, அந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலத்த காயமடைந்த முகமது யாசரை உறவினர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kallakurichi police
இதையும் படியுங்கள்
Subscribe