'My name should not be called Anbumani' - Ramadoss' speech Photograph: (pmk)
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் கடந்த 08/07/2025 அன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழுவில் பேசிய ராமதாஸ், ''என் வலியை அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். இன்னும் வராத 95 விழுக்காடு சொந்தங்கள் அங்கேயே வீட்டிலேயே இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் வலி அவர்களுக்கு தெரியும். தேர்தலில் போட்டியிட ஏ, பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்கே உள்ளது. கூட்டணி அமைப்பதற்கான அதிகாரத்தை பாமக செயற்குழு எனக்கே வழங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஆயத்தமாக இருங்கள்' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று(10/07/2025) கும்பகோணத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ''ஐந்து வயசு குழந்தை மாதிரி நான் இருக்கேனாம். அப்படியென்றால் அந்த குழந்தை தான் மூன்று வருடத்திற்கு முன்பு உங்களை தலைவர் ஆக்கியது. இப்பொழுது சொல்கிறேன் என் பெயரை யாரும் போடக்கூடாது. இன்சியல் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய பெயரை போடக்கூடாது. ஏனென்றால் என் பேச்சைக் கேட்கவில்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. உங்களை செயல் தலைவர் என்று தான் சொல்கிறோம். மக்களை சென்று பாருங்கள். மக்களுடன் மக்களாக வாழுங்கள். மக்களை பற்றி புரிந்து கொள்ளுங்கள். ஊர் ஊராக போங்கள்'' என்றார்.
பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கடந்த எட்டாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவிற்கு 2,500 பேர் வந்தார்கள். கார், பேருந்துகள் மட்டும் 200 வந்திருந்தது. அவ்வளவு பிரம்மாண்டமாக உற்சாகத்தோடு மாநிலச் செயற்குழு நடைபெற்றது'' என்றார்.
அப்போது செய்தியாளர்கள் 'நீங்களும் அன்புமணியும் இணைந்தால் கண்ணுக்கு அழகாக இருக்கும்' என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சொல்லி இருப்பதாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராமதாஸ், 'போகப் போக தெரியும்' என பாடல் வரியை சுட்டிக்காட்டி பேசினார். அதேபோல் சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்ற கேள்விக்கும் அதே பாடல் வரியை குறிப்பிட்டார்.