ஜூலை 16, 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த உலகையே மனதளவில் உறைய வைத்த கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணா என்ற பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமல்ல உலகத்தையே உலுக்கி இருந்தது அந்த 94 பிஞ்சு குழந்தைகளின் மரணம்.

பள்ளியின் மேல் பகுதியில் கூரையால் அமைக்கப்பட்ட உணவுக் கூடத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீயானது பள்ளியின் அடுத்தடுத்த வகுப்பறைகளுக்கும் பரவியது. உள்ளே இருந்த குழந்தைகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்த சிறிது நேரத்திலேயே தீக்கிரையாகினர். 

தீயின் கரும்புகை உள்ளே சூழ்ந்து கொண்டதும், பள்ளியின் குறுகலான வகுப்பறை கட்டமைப்பும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க முக்கியக் காரணமாக மாறிப்போனது. தன் குழந்தை பயிலும் பள்ளியில் தீ விபத்து என தகவலறிந்து அலறியடித்து வந்த பெற்றோர்கள், பெற்றக் குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் கதறி துடித்ததும், கரிக்கட்டைகளாக பிஞ்சுகளின் உடல்கள் மீட்கப்பட்டதும் என அன்றைய அச்சு ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள், செய்தித் தாள்களை கண்ணீரில் ஊற வைத்தது.

Advertisment

இந்த கோர விபத்து நிகழ்ந்து இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது. இன்றளவும் விம்மி அழுதேக் கிடக்கிறது பறிகொடுத்த பெற்றோரின் உள்ளம். ஆண்டுதோறும் பாலக்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு மண்டபத்தில் தன் பிள்ளைகளுக்கு பிடித்த உணவுப் பொருள்களுடன் வரும் பெற்றோர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இன்னமும் சோகம் கலையாத அதே முகத்தோடு. 

ஜூலை 16 ஆம் தேதியை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்ற குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்றளவும் நிறைவேறாத ஒன்றாகவே உள்ளது.