'My heart is pounding; When will the Tamil Nadu Chief Minister wake up?' - Vijay condemns Photograph: (tvk)
கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (02.11.2025) இரவு ஆண் நண்பருடன் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்களால் கல்லூரி மாணவி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
  
 Follow Us