பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த 12 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

திமுக தேர்தல் அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் அமர்ந்து ஐந்து ஆண்டுகள் முடியும் தருவாயிலும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மாறாக, அதிமுகவைப் போலவே செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், போராட்டத்தைக் கைவிடுமாறு அரசு மற்றும் காவல்துறை தரப்பில் இருந்து பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், போராட்டக்காரர்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு கட்சித் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று (12-08-25) போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியார்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, “தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 12 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். தனியார் நிறுவனத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முறையை ரத்து செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளர்களை நிரந்தர பணியில் அமர்ந்த வேண்டும். இன்று பல துறைகளில் தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதை முதலமைச்சிடம் வலியுறுத்தி இருக்கிறோம்” என்று கூறினார். இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முத்தரசன், “எடப்பாடி நிரந்தர கொள்கை அற்றவர்.  பத்து நாட்களுக்கு ஒரு முறை கொள்கைகளை மாற்றி கொண்டு வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சி அழித்துவிட்டது என கூறினார். அதற்கு அடு்த்த நாளே எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அதனை நாங்கள் நிராகரிக்கிறோம், நீங்கள் விரிக்கிற கம்பளம் ரத்தின கம்பளம் அல்ல ரத்தக்கறை படிந்த கம்பளம் என்று கூறினோம். அதற்கு அடுத்த நாளே கோபம் வந்து கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து விமர்ச்சிக்கிறார்.

Advertisment

யாராலும் கம்யூனிஸ்ட் கட்சியை அடகு வைக்கவும் முடியாது, விலைக்கு வாங்கவும் முடியாது. அதிமுக வரலாறு கூட தெரியாத போது அவருக்கு எப்படி கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு தெரியும். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது யார் ஆதரவு தெரிவித்தார்கள் என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்க எள்ளு அளவு எள் முனை அளவு கூட தகுதி இல்லாத நபர் தான் எடப்பாடி பழனிசாமி” என்று கூறினார். திமுக கூட்டணி கட்சி என்பதால் அழுத்தம் உள்ளதா என்று கேள்விக்கு பதிலளித்த அவர், “இதனை அரசியல் ஆக்க வேண்டாம். தூய்மை பணியாளர்கள் கோரிக்கை நியாமான கோரிக்கை அதனை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.