புனேவில் வரலாற்று சிறப்புமிக்க சனிவார் வாடா கோட்டைக்குள் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொழுகை நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பா.ஜ.க எம்.பி தலைமையிலான பா.ஜ.க தொண்டர்கள் அந்த இடத்தை கோமியம் மற்றும் சாணத்தை வைத்து சுத்தம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் சனிவார் வாடா கோட்டை என்ற வரலாற்று சிறமிக்க கோட்டை ஒன்று உள்ளது. இந்த கோட்டைக்குள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் தொழுகை செய்வது போன்ற வீடியோ சில தினங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பா.ஜ.க எம்.பி மேதா குல்கர்னி, போராட்டம் செய்ய அழைப்பு விடுத்தார். அதன்படி, நேற்று பா.ஜ.க எம்.பி மேதா குல்கர்னி தலைமையிலான பா.ஜ.க தொண்டர்கள் அந்த இடத்தில் போராட்டம் செய்தனர். மேலும் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர், அருகில் உள்ள ஹஸ்ரத் குவாஜா சையத் தர்காவை அகற்றக் கோரி அந்த தர்காவை தாக்க முயற்சி செய்தனர்.
அதனை தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அங்கு விரைவாக சென்று கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், முஸ்லிம்கள் தொழுகை செய்ததாகக் கூறப்படும் அந்த இடத்தை மேதா குல்கர்னி தலைமையிலான பா.ஜ.க தொண்டர்கள் கோமியம் மற்றும் மாட்டு சாணத்தை வைத்து சுத்தம் செய்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குல்கர்னி, “தொழுகை நடத்தப்படும் இடங்கள் பின்னர் மதத் தலங்களாக மாறுவதை நாங்கள் அடிக்கடி பார்த்திருக்கிறோம். இதுபோன்ற ஆக்கிரமிப்புகளைத் தடுக்க, நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். சனிவார் வாடா, சத்ரபதி சிவாஜி மகாராஜின் சுயராஜ்யத்தின் மரபைக் குறிக்கிறது. எந்த ஒரு மதத்தின் சடங்குகளும் அங்கு அனுமதிக்கப்படக்கூடாது. சனிவார் வாடா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். இது எங்கள் வெற்றியின் சின்னம், மராட்டியப் பேரரசு அட்டாக்கிலிருந்து கட்டாக் வரை விரிவடைந்தது. யாராவது இங்கு தொழுகை செய்ய வந்தால், நாங்கள் அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
தொழுகை செய்த இடத்தை கோமியம் மற்றும் சாணத்தை சுத்தம் செய்த சம்பவத்தை அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரூபாலி பாட்டீல் தோம்பரே கூறியதாவது, ‘மேதா குல்கர்னி புனேவில் மத மோதலை உருவாக்க முயன்றார். அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். சனிவர் வாடா அனைத்து புனேகர்களுக்கும் சொந்தமானது, எந்த ஒரு குழு அல்லது மதத்திற்கும் அல்ல. குல்கர்னி வேண்டுமென்றே நகரத்தில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கிறார். பாஜக அவரை கட்டுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.