உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், அம்பேத்கருக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களால் பதற்றம் நிலவி வரும் நிலையில் இஸ்லாமியப் பெண் தலைமை காவல் கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற வளாகத்தில் பி.ஆர். அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இது தொடர்பாக மத்திய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அனில் மிஸ்ரா என்பவர், அம்பேத்கரை பிரிட்டிஷாரின் அடிமை முகவர் மற்றும் பொய்யர் என்று அவதூறான கருத்துக்களை கூறியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து வழக்கறிஞர் அனில் மிஸ்ராவுக்கு எதிராக பட்டியலினத்தவர்கள் இன்று (15-10-25) போராட்ட பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனால், குவாலியர்-சம்பல் பகுதி முழுவதும் பதற்றம் நிலவியது. ஆனால், அந்த பேரணியை அவர்கள் கைவிட்டாலும், நகரத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கருதி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரிவு 163 அமலில் உள்ளது, இதனால் பொது மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான வழக்கறிஞர் அனில் மிஸ்ரா, நேற்று முன்தினம் மாலை பூல்பாக் அருகே ராமாயணத்தின் சுந்தர் காண்டத்தை ஓதுவதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஒரு கூடாரத்தை கொண்டு வந்தார். இது குறித்து தகவல் அறிந்த தலைமை காவல் கண்காணிப்பாளரான ஹினா கான், அங்கு விரைந்து அமலில் உள்ள தடை உத்தரவுகளை காரணம் காட்டி கூட்டத்தை கலைத்து செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் இதில் கோபமடைந்த வழக்கறிஞர் மிஸ்ரா, ஹினா கானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர், “சனாதன தர்மத்திற்கு எதிரானவர்” என்று ஹினா கானை குற்றம் சாட்டி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கோஷமிடத் தொடங்கினார். அதனை தொடர்ந்து, மிஸ்ராவின் ஆதரவாளர்களும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கோஷமிட்டனர்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த காவல் கண்காணிப்பாளர் ஹினா கான், மிஸ்ராவின் அருகே சென்று அவரது கண்களைப் பார்த்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என மீண்டும் மீண்டும் கோஷமிட்டார். இதனை கண்ட, அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். இதையடுத்து ஹினா கான், “ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டு எனக்கு அழுத்தம் கொடுப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள்” என்று கூறி கூட்டத்தை கலைக்க முயற்சித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.