மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஜான்வி. இவர் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஜான்வி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கேரளாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, மூணாறு பகுதியில் தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவத்தை வீடியோவாகச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “நாங்கள் மும்பையில் இருந்து கொச்சிக்குச் சென்று, பின் அங்கிருந்து ஆலப்புழைக்குச் சென்றோம். அந்த மக்கள் மிகவும் அன்பாகவும் வரவேற்புடனும் இருந்தனர். பின்னர், நாங்கள் மூணாறுக்குச் செல்ல முடிவு செய்தோம். ஆனால், அந்த முடிவுதான் எங்களின் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிவிட்டது. மூணாறு செல்வதற்கு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து ஆன்லைன் டாக்ஸியில் போக நினைத்தோம். ஆனால், அந்த ஹோட்டல் உரிமையாளர் மூணாறு செல்வதற்கு ஆன்லைன் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது என்றார். நாங்கள் காரணம் கேட்டதற்கு, உள்ளூர் டாக்ஸி மற்றும் ஆட்டோ யூனியன் என்று கூறினார்.
ஆனால், நாங்கள் ஏற்கனவே ஆன்லைனில் டாக்ஸி புக் செய்துவிட்டோம். அதனால், பிக்-அப் பாயின்ட்டில் இருந்து வேறு இடத்திற்கு வருமாறு கூறிய ஓட்டுநர், யாரும் பார்ப்பதற்கு முன்பே ஏறிவிடுங்கள் என்று எச்சரித்தார். அப்படியும், நாங்கள் எங்களது பைகளை டாக்ஸியில் ஏற்றிக்கொண்டிருந்த போது 4-5 பேர் கொண்ட கும்பல் ஒன்று எங்களை நோட்டமிட்டது. எங்களைப் பின் தொடர்ந்து வந்த அவர்கள், டாக்ஸி டிரைவரை மிரட்டினர். எங்களிடம் யாரும் பேசவில்லை. ஆனால், அவர்களின் மொழி புரியவில்லை என்றாலும், அவர்களின் ஆத்திரம் புரிந்தது. மிகவும் பயமாக இருந்தது. தகவலின்பேரில் போலீசாரும் வந்தனர். ஆனால், அவர்களும் யூனியன் உறுப்பினர்களுடன் மட்டுமே பேசினார்கள். எங்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பின்னர், ஆன்லைன் டாக்சிக்கு அனுமதியில்லை... நீங்ங்கள் புக் செய்திருந்த ஆன்லைன் டாக்சியை கேன்சல் செய்துவிட்டு, உள்ளூர் யூனியனின் வாகனத்தில் செல்லுமாறு அறிவுறுத்தினர். கேரள சுற்றுலாத் துறைக்கு அழைத்தபோதும் அதே பதில்தான் வந்தது. ‘எல்லோரும் ஒரே வாக்கியத்தைச் சொன்னார்கள்: அனுமதியில்லை!’
யாருடன் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு எங்களுக்கு அனுமதியில்லையா? நாங்கள் பாதுகாப்பாக உணர எங்களுக்கு அனுமதியில்லையா? அரசியலமைப்பு உரிமைகளைப் பயன்படுத்த எங்களுக்கு அனுமதியில்லையா? ஒரு பெண்ணாக ஆன்லைன் டாக்ஸியில் பயணம் செய்வதே பாதுகாப்பானது. அதன்படி தங்களது இருப்பிடத்தைக் கண்காணிக்கலாம். குடும்பத்தினருக்கும் பகிரலாம், புகார் அளிப்பதும் கூட எளிது. ஆனால், அங்கு சற்று முன் எங்களை மிரட்டியவர்களுடன் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். இறுதியாக, ‘கேரளாவை நேசித்தேன், அதன் அழகு.. மக்கள் அனைத்தும் அற்புதம். ஆனால், பாதுகாப்பாக உணர முடியாத இடத்திற்கு என்னால் மீண்டும் வர முடியாது’ என்று தனது வீடியோவை முடித்துக்கொண்டார்.
ஜான்வியின் இந்த வீடியோ கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு டாக்ஸி டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், ஒரு சப் இன்ஸ்பெக்டர் உள்பட இரண்டு போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்துப் பேசிய கேரள சுற்றுலா மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ், “மூணாறில் நடந்த டாக்ஸி தொல்லை சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. கேரளாவுக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருந்த அந்தப் பெண்ணுக்கு இதுபோன்ற அனுபவங்கள் மாநிலத்தைப் பற்றிய எதிர்மறைத் தோற்றத்தை ஏற்படுத்தும். கேரளா இந்தியாவின் மிகப் பாதுகாப்பான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. மூணாறில் நடந்தது ஒரு எதிர்மறை நிகழ்வு. இதுபோன்ற சம்பவங்கள் சுற்றுலாப் பயணிகள் வருகையைப் பாதிக்கக் கூடாது. கேரளா அமைதியும் விருந்தோம்பலும் கொண்டது. வெளிமாநிலப் பயணி இங்கு இதுபோன்ற அனுபவத்தை எதிர்கொள்ளக் கூடாது. இந்தப் பிரச்சினை மற்ற அமைச்சர்கள், டாக்ஸி சங்கப் பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்பட்டு, மீண்டும் நிகழாமல் தடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் ஜான்வியிடம் சமூக வலைதளம் மூலம் மன்னிப்புக் கேட்டு வருகின்றனர். மலையாளிகளின் உண்மையான அன்பு குறித்துத் தெரிந்துகொள்வதற்கும், கேரளாவின் அழகை ரசிப்பதற்கும் நீங்கள் மீண்டும் இங்கு வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/05/untitled-1-2025-11-05-14-29-43.jpg)