அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக அரசின் மகளிர் திட்டம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த முகாமில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலை நாடுநர்கள் 1000த்திற்கும் மேற்பட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2025-26 ஆம் ஆண்டிற்கான முதலாவது வேலை வாய்ப்பு முகாம் இன்று (23.08.2025) நடைபெற்றது. இந்த முகாமில் 72 தனியார் நிறுவனங்களை இளைஞர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு உரிய வேலை வாய்ப்புகளை பெற்று பயனடைய வேண்டும். நடிகர் விஜய் ரசிகர்கள் கூட்டத்தை கூட்டி தமிழக முதல்வரையும், திமுகவையும் பேசியது அவரது தரத்தை காட்டுகிறது. அரசியல் பண்பு இல்லாமல் பொழப்புக்காக அடுத்த வியாபாரத்திற்காக அவர் பேசியுள்ளார். சினிமாவில் இளமைக்காலம் முடிவடைந்த நிலையில் சினிமாவில் அவருக்கு மவுசு குறைந்த பிறகு அடித்து அடுத்த தொழில்வளர்ச்சிக்கு அவர் பேசுகிறார். ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற நாட்களில் இருந்து மக்களுக்கு தேவையான மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், மாணவர்களுக்கு நான் முதல்வன் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சினிமா வேறு, அரசியல் வேறு ரசிகர்களின் கூட்டத்தை பார்த்துவிட்டு சினிமா வசனம் போல் முதிர்ச்சி இல்லாமல் பேசி உள்ளார். திமுக அரசை குறை கூறினால் தான் பொழப்பை நடத்த முடியும் என்று திமுக குறித்து பேசுகிறார். நாங்கள் உழைத்து மக்களிடம் நேரடியாக சென்று மக்கள் நலனுக்காக போராடி வருகிறோம். இந்த முகாம் மாணவர்களின் சொந்த ஊர்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது” என்றார். இந்த நிகழ்ச்சியில் உதவிஆட்சியர் கிஷன்குமார், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஜெய்சங்கர், உதவி திட்ட அலுவலர் சரவணபாண்டியன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/23/cd-mrk-fun-2025-08-23-18-20-54.jpg)