பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதாவது வழக்கமான உடல் பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்த ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாகப் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று (07.10.2025) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதே சமயம் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நேரில் வந்தும், தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டும் நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்து பாமக தலைமை நிலையம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்தபோது ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குறையேதும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். தனக்கு ஓய்வே கிடையாது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், ராமதாஸைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். இது குறித்து தொல். திருமாவளவன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென வி.சி.க. சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.