தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் தொடங்கினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இந்த போராட்டமானது தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணா நிலையில் சசிகாந்த் உள்ளார். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தன்னுடைய ஆதரவைத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவித்தும் ஏற்காத சசிகாந்த், தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.