குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்து வந்த நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2019 மற்றும் 2024 என அடுத்தடுத்து நடைபெற்று மக்களவைத் தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவி வகித்து வருகிறார். மற்றொரு புறம் பா.ஜ.க.வில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஆட்சியிலும் கட்சியிலும் பதவி வகிக்க கூடாது என்ற விதி உள்ளது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதியுடன் 75 வயது நிறைவடைய உள்ளது. இதனால் பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவ்வப்போது பேச்சுகள் எழுந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், 75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருந்தது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 9ஆம் தேதி நாக்பூரில் மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோரோபந்த் பிங்கிளே குறித்து எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது, “உங்களுக்கு 75 வயதாகும் போது இப்போதே நிறுத்திவிட்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். 75 வயதை எட்டியப் பிறகு உங்களுக்கு சால்வை அணிவிக்கப்படும். அப்படியென்றால் உங்களுக்கு வயதாகிவிட்டது, நீங்கள் விலகி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என மோரோபந்த் பிங்கிளே கூறியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி மற்றும் மோகன் பகவத் ஆகிய இருவரும் செப்டம்பரில் 75 வயதை எட்டுகிறார்கள். இந்த சூழ்நிலையில், மோகன் பகவத்தின் இந்த கருத்து அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற பிறகு கடந்த மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ் தலைமையிகத்திற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது கருத்து தெரிவித்த சஞ்சய் ராவத், பிரதமர் மோடி விரைவில் ஓய்வு பெற இருக்கிறார் என்று கூறினார். ஆனால், பிரதமர் மோடி வரும் 2029 வரை தொடர்ந்து தலைவராக நீடிப்பார் என்று ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பா.ஜ.கவினர் உறுதியாகக் கூறி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நரேந்திர மோடி அடுத்த 15,20 வருடங்களுக்கு தலைவராக இருப்பார் என பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நிஷிகாந்த் துபே, ‘அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடியை மட்டுமே தலைவராக இருப்பார். பிரதமர் மோடியை பாஜகவின் முகமாக முன்னிறுத்தப்படாவிட்டால், மக்களவை தேர்தலில் பா.ஜ.க 150 இடங்களைக் கூட வென்றிருக்க முடியாது. 2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் பெயரில் போட்டியிடுவதை தவிர பாஜகவுக்கு வேறு வழியில்லை. இன்று, பா.ஜ.கவுக்கு தான் மோடி தேவை, அவருக்கு பா.ஜ.க தேவையில்லை. பிரதமர் மோடிக்கு பாஜக தேவைப்படுவதை விட, கட்சிக்கு அவர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே தேவை. எனவே, இது பிரதமர் மோடிக்கு பொருந்தாது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/18/dubey-2025-07-18-13-15-48.jpg)