விருதுநகர் ரயில் நிலைய நுழைவாயில் முன்பு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிப் பேசிய விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ​“உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது மட்டும் வந்து சென்றால் அது போராட்டம் கிடையாது. மாலை 5 மணி வரை இருப்பவர்கள்தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள். மாலையில் எதற்காக அட்டென்டன்ஸ் எடுக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்?. நடுவில் சென்று விட்டவர்கள் எல்லாம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைக்க வந்தவர்கள் என்றே அர்த்தம்” என நகைச்சுவையாகப் பேசினார். 

Advertisment

2006ஆம் ஆண்டு சோனியா காந்தி தலைமையிலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்திலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. திமுக, பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 30 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஒரு ஆண்டு முழுவதும் விவாதிக்கப்பட்ட பிறகே வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது எந்த ஒரு கட்சியின் தனிப்பட்ட திட்டமும் அல்ல; நாடாளுமன்ற ஒப்புதலுடன் உருவான சட்டம். இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம், விவசாயம் இல்லாத நாள்களில் கிராமப்புற ஆண்கள், பெண்களுக்கு வேலை வழங்குவது. 100 நாள் வேலை என்பது கிராமத்தில் மரியாதையான வேலை. இழிவான வேலை எதுவும் இல்லை. 2006 பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் இன்னும் 10 – 20 நாட்களில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.

Advertisment

ஆண்டுதோறும் சுமார் 13 கோடி பேருக்கு இந்த திட்டம் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. 2014ல் மோடி அரசு வந்தவுடன், 100 நாள் வேலைத் திட்டத்தை முடித்துவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் பல காரணங்களால் அந்த திட்டத்தை நிறுத்த முடியவில்லை. தற்போது, சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ‘வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி அளிப்பு (VBR-GJ)’ என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இரவோடு இரவாக அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தலைமையகம் 45 நாள்கள் மக்களைத் திரட்டி விழிப்புணர்வு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இது முதல் கட்ட போராட்டம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை இந்தப் போராட்டம் நடைபெறும்.

amit-shah-tn-mic

காங்கிரஸ் கட்சியின் அரசியல், மற்றவர்களைத் திட்டுவது அல்ல. மக்களுக்காக தங்களை வருத்திக் கொண்டு போராடுவதுதான். இதுவே மகாத்மா காந்தி – காமராஜர் வழியில் பயணிக்கும் காங்கிரஸ். அவமதிப்பும் இழிவுபடுத்தலும் மற்ற கட்சிகளின் அரசியல் நடைமுறை. நாம் எல்லோரும் ஏழை, எளிய மக்களின் வேலைவாய்ப்பை பறித்துவிட்டீர்களே என்று உண்ணாவிரதம் இருக்கும்போது, பாஜகவினர் பொங்கல் வைக்கிறார்கள். இந்த திமிரையும் அகந்தையையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆணவத்திற்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சினிமா படமாக இருந்தாலும் சரி, வேலைவாய்ப்பு திட்டமாக இருந்தாலும் சரி, மோடி – அமித்ஷா இருவரின் திமிரே பாஜக அரசியலின் அடையாளமாக இருக்கிறது. சாமானிய ஏழை மக்களை அவமானப்படுத்தும் இந்த போக்குக்கு தமிழகத்திலும், விருதுநகரிலும் சரியான பதில் கிடைக்கும்.

Advertisment

சோனியா காந்தியை அவமதிப்பதற்காகவே 100 நாள் வேலைத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை பிரதமர் மோடி குறைத்தார். வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் பழைய சட்டம் முடிவடைகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாது என்பதே உண்மை. விருதுநகர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். ஆண்டுக்கு சுமார் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை பல குடும்பங்களுக்கு இந்த திட்டம் வருமானமாக இருந்தது. உண்ணாவிரதம் தொடங்கி மாலை 5 மணி வரை இருப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம் இருந்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். இல்லையெனில், பத்திரிகையாளர்கள் போல தொடங்கி வைத்துச் சென்றவர்கள் என்றே அர்த்தம். அதனால், அனைத்து நிர்வாகிகளும் கடைசி வரை உண்ணாவிரத போராட்டத்தில் இருக்க வேண்டும்.” என்றார்.