விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில் “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒரே நாளில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். 100 நாள் ஊரக வேலைத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன், 45 நாள் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக உண்ணாவிரதம், கிராமங்களில் போராட்டங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சத்தியாகிரகம், ஆளுநர் மாளிகை முற்றுகை உள்ளிட்ட ஆறு கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. பழைய 100 நாள் வேலைத் திட்டத்தை வாபஸ் பெற்ற மத்திய அரசு, ‘வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி’ என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. பழைய திட்டத்தில் ஊராட்சிகளில் பதிவு செய்தவர்களுக்கு வேலை வழங்கும் பொறுப்பு இருந்தது. புதிய திட்டத்தில் பதிவு முறை இல்லை. எந்த ஊராட்சியில் வேலை வழங்கப்படும் என்பது லாட்டரி முறையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், மாநில அரசு 40% நிதி வழங்க வேண்டும். மாநிலங்களிடம் நிதி இல்லாத சூழலில், வேலை வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்படும்.
100 நாள் வேலைக்கு விண்ணப்பித்துப் பணி கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்ற மத்திய அரசின் வாக்குறுதி நடைமுறையில் சாத்தியமற்றது. நிதி ஒதுக்கீடு இல்லாமல் உதவித்தொகை வழங்க முடியாது. 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாளாக உயர்த்தியதாக அறிவித்த மத்திய அரசு, அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. வெறும் விளம்பரங்களாலும், வாக்குறுதிகளாலும் ஏழை மக்களின் பிரச்சினைகள் தீராது. இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஏழை மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தும் நிலையில், மத்திய அரசு காண்ட்ராக்டர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. காண்ட்ராக்டர்களின் கமிஷனால்தான் மத்தியில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த போக்குக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்” என்றார்.
Follow Us