கோவில்பட்டியில் வந்தே பாரத் தொடர்வண்டி இன்று (09.10.25) முதல் நின்று செல்லும், இது மதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்து வரும் வர்த்தக நகரமாக விளங்குகின்ற கோவில்பட்டியில் சென்னை - நெல்லை வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்து வந்தது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ, ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவை நேரில் சந்திந்து வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்ல வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

Advertisment

கோவில்பட்டியில் வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்ல வலியுறுத்தி எனது தலைமையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை 25.09.2023 அன்று நடத்தி, வந்தே பாரத் இரயில் கோவில்பட்டியில் கண்டிப்பாக நின்று செல்ல தேவையான நடவடிக்கைகளை மதிமுக முன்னெடுக்கும் எனப் பேசினேன். வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்ல போராட்டம் நடத்திய ஒரே இயக்கம் மதிமுக மட்டுமே. இக்கோரிக்கையை நினைவூட்டி ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவை 18.08.2025 அன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். இரயில்வே துறை அதிகாரிகளிடமும் அவ்வப்போது வலியுறுத்தி வந்தேன்.

rayil

தற்போது கோவில்பட்டியில் வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்லும் என்ற அறிவிப்பை தொடர்ந்து இன்று ( 09.10.25) முதல் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் வந்தே பாரத் தொடர் வண்டி (எண் 20666) காலை 6.38 மணிக்கு கோவில்பட்டியில் நின்று செல்கிறது. அதே போல் சென்னையில் புறப்படும் இரயில் (வண்டி எண் 20665) கோவில்பட்டியில் இரவு 9.23க்கு நின்று செல்லும். இன்று மேள தாளங்கள் முழுங்க நூற்றுக்கணக்கான கழகத் தோழர்கள் பங்கேற்று பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், ரயில் பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி வரவேற்றதோடு நமது தொடர் நடவடிக்கைகளை விளக்கி  மாவட்டக் கழகம் வடிவமைத்துள்ள துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். 

Advertisment

தொடர்ந்து ஒரு வாரத்திற்கு வந்தே பாரத் வந்து செல்லும் போது வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். கோவில்பட்டி மக்களின் குரலாக தலைவர் வைகோவும், நானும் தொடர்ந்து இக்கோரிக்கையை ஒன்றிய இரயில்வே அமைச்சகத்திடம் இடைவிடாது வலியுறுத்தி வந்ததன் விளைவாக, தற்போது இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இன்று முதல் தொடர் வண்டி நின்று செல்வதை அறிந்து மனம் மகிழ்கிறேன்” என்றார்.