அனைவரது வீட்டிலும் நூலகம் அமைக்க வேண்டும், அப்போதுதான் சமூக மாற்றம் ஏற்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் புறவழிச்சாலையில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் தலைவராக செயல்பட்டு மறைந்த எல்.இளையபெருமாளுக்கு தமிழக அரசு ரூ.5 கோடியில் நூற்றாண்டு அரங்கம் அமைத்துள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூலை மாதம் திறந்து வைத்தார்.
இதில் முதல் நிகழ்வாக அய்யா எல்.இளையபெருமாள் நூற்றாண்டு பேரவை சார்பில் இளையபெருமாள் கமிட்டி அறிக்கை பிரதி வெளியீட்டு விழா இன்று (27-09-25) நடைபெற்றது. சுவாமி சகஜானந்தா சமூக அறக்கட்டளை தலைவர் கே.ஆர்.பாலையா வரவேற்றார். விழாவிற்கு காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ம.சிந்தனைசெல்வன் தலைமை வகித்து பேசினார். அவர் பேசுகையில், “செப்.27-ம் தேதி மகளிர் உரிமைக்காக தனது சட்ட அமைச்சர் பதவியை டாக்டர் அம்பேத்கர் ராஜினாமா செய்த நாளை அதன் நினைவாக ஆண்டு தோறும் செப் 27-ம் தேதியை அகில இந்திய மகளிர் எழுச்சி தினமாக கொண்டாடப்படும்” எனத் தெரிவித்தார்.
சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்பி பங்கேற்று, மறைந்த தலைவர் எல்.இளையபெருமாள் கமிட்டி அறிக்கையின் பிரதியை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “பட்டியல் சமூகத்திலிருந்து படித்து வேலைக்கு போகின்றவர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் சுமார் 50 நூல்கள் கொண்ட நூலகம் அவசியம் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக அம்பேத்கர் உள்ளிட்ட சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் நூல்களை நாம் படிக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் மாற்றம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும். கடலூர் தமிழ்நாட்டிலேயே அரசியல் விழிப்புணர்வு அடைந்த மாவட்டம். இந்த மாவட்டத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இதுநாள் வரை அரசு கட்டிடங்கள் கட்டப்படவில்லை. சாதாரண அடிப்படையான கட்டமைப்பு கூட இங்கு இல்லை. இதுகுறித்து ம.சிந்தனை செல்வன் எம்எல்ஏ சட்டப்பேரவையில் பேசிய பிறகு அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் என தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, அண்ணாமலைப் பல்கலைக்கழக டாக்டர் அம்பேத்கர் இருக்கை பேராசிரியர் வீ.ராதிகாராணி, முனைவர் விஜயராணி, நீதிவளவன், தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி, எல்.கே.மணவாளன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.