மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பெண் மருத்துவர். இவர் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், 23 ஆம் தேதி இரவு பால்டானில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலின் அறையில் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment

உடனடியாக விரைந்து வந்த போலீசார் பெண் மருத்துவரின் உடலை கைப்பற்றினர். அப்போது அவரது உள்ளங்கையில், தனது தற்கொலைக்கு காவல் உதவி ஆய்வாளர் கோபால் தான் காரணம் என்றும், அவர் தன்னை கடந்த 5 மாதங்களாக நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் எழுதி வைத்திருந்தார். மேலும்,  அவரது(பெண் மருத்துவர்) வீட்டின் உரிமையாளர் பிரசாந்த் பங்கர் தன்னை மன ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் எழுதி வைத்திருந்தார். உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், உள்ளங்கையில் எழுதி வைத்திருந்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisment

இந்நிலையில், பெண் மருத்துவர் தற்கொலைக்கு முன்பு தான் எழுதி வைத்திருந்த 4 பக்க கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில், “போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பட்னே என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக உடல், மன ரீதியாகத் தொடர்ந்து துன்புறுத்தினார். இந்தத் துன்புறுத்தல்களே என்னைத் தற்கொலை செய்யத் தூண்டியது. குற்றவாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வராமலேயே உடல் தகுதி சான்றிதழ் (Fitness Certificate) வழங்குமாறு காவல் உதவி ஆய்வாளர் வற்புறுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால், SI கோபால் பட்னே மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் சித்ரவதை செய்தனர்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஒரு முறை போலி உடல் தகுதி சான்றிதழ் கொடுக்க மறுத்தபோது, ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் மருத்துவமனைக்கு வந்து நேரடியாக மிரட்டினர். அவர்கள் திடீரென எம்.பி.க்கு போன் செய்து கொடுத்தனர். அப்போது எம்.பி.யும் என்னை மறைமுகமாக மிரட்டினார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

போலி உடல் தகுதி சான்றிதழ் கொடுக்கும் விவகாரத்தில் தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து பெண் மருத்துவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளருக்கு இரண்டு முறை புகார் மனு கொடுத்ததாகவும், ஆனால் அந்த மனு தொடர்பாக காவல்துறை தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பெண் மருத்துவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அன்றைக்கே மனு மீது உரிய விசாரணை நடத்தியிருந்தால், இன்று பெண் மருத்துவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உதவி காவல் ஆய்வாளர் கோபால் பட்னே மற்றும் பிரசாந்த் பங்கர் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், உதவி காவல் ஆய்வாளர் கோபால் பட்னே தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்திருக்கிறது. இதனிடையே தலைமறைவாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பிரசாந்த் பங்கர் இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், பெண் மருத்துவரின் தற்கொலையைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், பெண் மருத்துவர் புகார் அளித்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? குற்றவாளிகளை அரசே பாதுகாக்கிறதா? மருத்துவரை மிரட்டிய அந்த எம்.பி. யார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.